அழகு திருமலைராய பெருமாள் கோவிலில் வருண ஜெபம்
உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகளை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையும் சாகுபடி பணிக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கை கொடுத்து உதவவில்லை. இதன் காரணமாக நீராதாரங்கள் குறைந்தபட்ச நீர் இருப்புக்கே தள்ளாடி வருகிறது. இதனால் பாசனப்பரப்புகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த சூழலில் சீரான மழை வேண்டி திருமூர்த்தி நகர் அருகே உள்ள அழுகு திருமலை ராய பெருமாள் கோவிலில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் வருண ஜெபம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மேலாளர் ரகோத்தமன் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பொதுப்பொங்கல் வைக்கப்பட்டது.அப்போது வறண்டு காணப்படும் விளை நிலங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்ப மழை பெய்ய வேண்டும் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்வில் தென்னை வளர்ச்சி வாரிய தொழிலாளர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.