பொன்னாலம்மன் துறை கூட்டு குடிநீர் திட்டம் பாதிப்பு


பொன்னாலம்மன் துறை கூட்டு குடிநீர் திட்டம் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2023 4:15 AM IST (Updated: 13 Aug 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

மின்தடை, அடிக்கடி மோட்டார் பழுது காரணமாக ஆனைமலை தாலுகாவில் பொன்னாலம்மன் துறை கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்


ஆனைமலை


மின்தடை, அடிக்கடி மோட்டார் பழுது காரணமாக ஆனைமலை தாலுகாவில் பொன்னாலம்மன் துறை கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


கூட்டுக்குடிநீர் திட்டம்


ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட ஓடையகுளம், கோட்டூர் மற்றும் வேட்டைக்காரன்புதூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.


இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 2002-ம் ஆண்டு பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கிராமங்கள் தோறும் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளை ஒப்பந்ததாரர்களே மேற்கொண்டு வருகின்றனர்.


பெரும்பாலான கிராமங்களில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி, அங்கிருந்து புவிஈர்ப்பு விசை மூலம் வீடுகள் தோறும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.


குடிநீர் தட்டுப்பாடு


இந்த நிலையில் பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளை குடிநீர் வடிகால் வாரியத்தினர் முறையாக பாராமரிக்காததால் அடிக்கடி மின்மோட்டார்கள் பழுதடைந்து வருகிறது. இதனால் குடிநீர் கொண்டு செல்ல முடியாததால், சீராக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே உயர் அதிகாரிகள் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-


பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை நம்பி 3 பேரூராட்சிகள், 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர். இத்்த திட்டம் தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இங்குள்ள மின்மோட்டார்களை முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுது ஏற்பட்டு, குடிநீர் பாதித்து வருகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படும்போதும் மின்மோட்டார்கள் பழுதாகி வருகின்றன. சில நேரங்களில் உயர் அழுத்தம் காரணமாக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் ஒருவாரத்திற்கு ஒருமுறை வழங்கவேண்டிய குடிநீர் 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


போராட்டம்


இதையடுத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், மின்மோட்டார்களை சரியாக பராமரிக்க வேண்டும், பழமையான குழாய்களை மாற்ற வேண்டும் என்று பல முறை புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சரியாக பதில் அளிப்பதும் இல்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.


இதன் காரணமாக பொன்னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்மோட்டார்களை மாற்றி, அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் கிராமந்தோறும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story