பொன்னணியாறு அணையை தூர்வார வேண்டும் - விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
பொன்னணியாறு அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னணியாறு அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
ஸ்ரீரங்கம் வருவாய் கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக பா.ஜ.க. விவசாய பிரிவு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னத்துரை, பசுமை புரட்சி பாசன விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் மருங்காபுரி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வையம்பட்டி அருகே உள்ள பொன்னணியாறு அணையில் 30 அடி உயரத்திற்கு மண் தேங்கி உள்ளது. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் பெய்த சூறைக்காற்று மழையால் வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் அதிகளவில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மருங்காபுரி தாலுகாவை ஒட்டிய திருச்சி மாவட்ட எல்லையோரம் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கிராமமான ஒலியமங்கலம் மற்றும் ஜீயபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டு விலங்குகளால் விளைநிலம் சேதம்
வையம்பட்டியில் காய்கறி குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். மணிகண்டம் அருகே மேக்குடியில் சுடுகாட்டு இடத்தை தனிநபரிடம் இருந்து மீட்க வேண்டும். மணிகண்டத்திலிருந்து ஓலையூர் வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மருங்காபுரி விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலை, குளம் குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் கோட்டாட்சியர் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் தாசில்தார்கள் சிவக்குமார் (ஸ்ரீரங்கம்), தனலட்சுமி (மணப்பாறை), செல்வசுந்தரி (மருங்காபுரி) மற்றும் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் கோட்டாட்சியரின்நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.