திருச்சி காந்திமார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்


திருச்சி காந்திமார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
x

ஆயுதபூஜையை இன்று கொண்டாடப்படுவதையொட்டி காந்திமார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. விலை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

திருச்சி

ஆயுதபூஜையை இன்று கொண்டாடப்படுவதையொட்டி காந்திமார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. விலை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆயுதபூஜை கொண்டாட்டம்

ஆயுதபூஜை பண்டிகை இன்றும் (திங்கட்கிழமை) மற்றும் விஜயதசமி நாளையும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை நாளில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும் வீடுகளிலும் பூஜை செய்து, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையொட்டி திருச்சி காந்திமார்க்கெட்டில் பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பூஜை பொருட்களின் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது.

பொன்மலை வாரச்சந்தை

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொன்மலை வாரச்சந்தையிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமானோர் பூஜை பொருட்களை வாங்கி சென்றனர். இந்தாண்டு பூஜைபொருட்களின் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் ஆயுதப்பூைஜையை முன்னிட்டு பழங்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. வாழைத்தார் பூவன் ரூ.650, செவ்வாழை ரூ.900, கற்பூரவள்ளி ரூ.650, ரஸ்தாலி ரூ.500, ஆப்பிள் ரூ.160-க்கும், ஆரஞ்சு ரூ.80-க்கும், மாதுளை ரூ.150-க்கும், சாத்துக்குடி ரூ.60-க்கும், கொய்யா ரூ.120-க்கும் விற்பனையானது.

வாழைக்கன்று ஜோடி ரூ.40-க்கும், மாவிலை தோரணம் இரண்டு ரூ.20-க்கும், வெள்ளை பூசணி ரூ.30 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது. பொரி கிலோ ரூ.100-க்கும், பொட்டுக்கடலை ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.160 முதல் ரூ.180-க்கும், அவல் ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. கருப்பு சுண்டல் கிலோ ரூ.90-க்கும் கொண்டை கடலை ரூ.190-க்கும், மண்டை வெல்லம் ரூ.60-க்கும், அச்சுவெல்லம் ரூ.60-க்கும் விற்கப்படுகிறது.

பூ, பழங்களின் விலை உயர்வு

இதேபோல் ஆயுதப்பூஜையையொட்டி பூக்களின் விலையும் சரிபாதி அளவு உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்ற மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.700-க்கு விற்கப்படுகிறது. முல்லைப்பூ ரூ.600-க்கும், சாதிப்பூ ரூ.500-க்கும், செவந்தி ரூ.250-க்கும், ரோஜாப்பூ ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும் விற்கப்படுகிறது. ஆயுதபூஜை கொண்டாட்டத்துக்காக நேற்று திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொழிற்நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளில் பலர் ஈடுபட்டனர்.

இது குறித்து மளிகை கடை வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பொரி, பொட்டுக்கடலை, நிலக்கடலை உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்ந்ததை தொடர்ந்து, பொரி விலையும் உயர்ந்துவிட்டது. 7 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கிறது. பொட்டுக்கடலையும், நிலக்கடலையும் கிலோவுக்கே ரூ.40 விலை உயர்ந்துள்ளது. ஆனால் சரக்குகள் தேக்கமின்றி வரத்துள்ளது என்றார்.

பொரி, பொட்டுக்கடலை

காந்திமார்க்கெட் பூ வியாபாரி சுந்தர் கூறும்போது, ஆயுதப்பூஜை மற்றும் முகூர்த்த நாட்கள் எதிரொலியாக காந்திமார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூக்களின் விலை தற்போது விற்கும் விலையில் பாதி அளவு தான் இருந்தது. நாளை (இன்று) ஆயுதப்பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என அதிகமானோர் பூக்களை வாங்க குவிந்துள்ளனர் என்றார்.

கம்பரசம்பேட்டையை சேர்ந்த புவனேஸ்வரி கூறும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பூஜை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பொரி, பொட்டுக்கடலை என அனைத்துமே விலை உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஆயுதபூஜைகளை விமர்சையாக கொண்டாட முடியவில்லை. தற்போது கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தான் மக்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் விலை உயர்வு மக்களை பாதிப்படைய செய்துள்ளது என்றார்.

சாமானிய மக்கள் பாதிப்பு

ராதாகாலனியை சேர்ந்த வசந்தி கூறும்போது, ஆயுதப்பூஜைக்காக மார்க்கெட்டுக்கு பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வந்தேன். விலை தாறுமாறாக உள்ளது. சாமானிய மக்கள் எப்படி வாங்க முடியும். ஒரு சிலர் தாங்கள் வாங்க எண்ணி வந்த பொருட்களின் அளவை விலை உயர்வு காரணமாக சற்று குறைத்து வாங்கி சென்றனர் என்றார்.

சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த மாலினி கூறுகையில், பூஜை பொருட்கள் மற்றும் பூக்களின் விலையும் அதிகமாக உள்ளது. பண்டிகை காலம் வந்துவிட்டாலே விலையும் ஏறி விடும். அந்த நேரத்தில் தான் வியாபாரிகளும் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். விலை அதிகமாக விற்றாலும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை தேடி, தேடி வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


Next Story