தர்மபுரியில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம் பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி


தர்மபுரியில்  பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்  பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பூக்களின் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி

தர்மபுரியில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பூக்களின் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதேபோன்று நாளை (புதன்கிழமை) விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், கடைகள், பணிமனைகள், கல்விக்கூடங்கள், வீடுகளில் வாழைமரம் கட்டி வண்ண, வண்ண பூக்கள் மற்றும் அலங்கார காகிதங்கள், கொடிகள் கட்டி விநாயகர், சரஸ்வதி, லட்சுமி சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த பூஜையின்போது தேங்காய், பல்வேறு வகையான பழங்கள், சுண்டல், பொங்கல் மற்றும் பொரிகடலை வைத்து படையலிட்டு வழிபடுவதுண்டு.

இதையொட்டி தர்மபுரியில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கிய வீதிகளான பென்னாகரம் ரோடு, கடைவீதி, முகமது அலி கிளப் ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, விவேகானந்தா டவுன்ஹால் ஆகிய இடங்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிராமப்புறங்களில் இருந்தும், நகரின் பல்வேறு இடங்களில் இருந்தும் பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் தர்மபுரியில் குவிந்தனர்.

பூக்கள் விலை

இந்த நிலையில் தர்மபுரியில் பூக்களின் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க நேற்று அதிகாலை முதல் இரவு வரை சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்தனர். ஒரு கிலோ நாட்டு சாமந்தி ரூ.300 முதல் 350 வரையிலும், செயற்கை சாமந்தி (ஹைபிரிட்) ரூ.200 முதல் 250 வரையிலும் விற்பனையானது. குண்டு மல்லி ரூ.700, சன்னமல்லி ரூ.700, ஜாதி மல்லி ரூ.350, அரளி ரூ.360, பன்னீர் ரோஸ் ரூ.200, மூக்குத்தி ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.260, செண்டுமல்லி ரூ.40 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

இதேபோன்று வாழை மரங்கள் மற்றும் வாழைக்கன்றுகள், மாவிலை ஆகியவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த வாழை மரங்கள் ஒரு ஜோடி ரூ.200 முதல் விற்பனையானது. சிறு வாழைக்கன்றுகள் ரூ.20 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இதேபோன்று தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட சாம்பல் பூசணி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விளைச்சல் குறைந்ததால் இந்தாண்டு சாம்பல் பூசணி விலை சற்று அதிகமாகவே இருந்தது.

பொரி கடலை

இதேபோன்று தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி கடலை, வெல்லம், அவல், வாழைப்பழம், தேங்காய் மற்றும் ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யா, மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் விற்பனையும் ஜோராக இருந்தது. மேலும் வணிக நிறுவனங்களை அலங்கரிக்கும் அலங்கார பூக்கள் மற்றும் காகித பூக்கள் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. தர்மபுரியில் பூஜை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story