குளங்கள் வேகமாக நிரம்புகின்றன


குளங்கள் வேகமாக நிரம்புகின்றன
x

கோவையில் பரவலாக மழை பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்புகின்றன.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் பரவலாக மழை பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்புகின்றன.

பரவலாக மழை

கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்றும் மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மழை கவச உடை அணிந்து சென்றனர்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால், வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

தண்ணீர் திறப்பு

ஆற்றின் இருகரைகளையும் வெள்ளம் தொட்டப்படி செல்வதால், குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்து கோவையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கோவை- சிறுவாணி ரோடு இருட்டுப்பள்ளம் அருகே பெருமாள்கோவில் பதியில் இருக்கும் 30 அடி உயர தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்து ஓடுகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

5 குளங்கள் நிரம்பின

கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு மூலம் 24 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. அந்த வகையில் தற்போது மழை காரணமாக நொய்யல் ஆற்றில் 430 கனஅடி தண்ணீர் செல்கிறது.

இதனால் சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் நரசாம்பதி, புதுக்குளம், செம்மேடு அருகே உக்குளம், செல்வசிந்தாமணி குளம் என 5 குளங்கள் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்கிறது.

தேவிசிறை தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன.

பேரூர் பெரியகுளம், கங்கநாராயணசமுத்திரம், சொட்டை யாண்டிகுளம், செங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட குளங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

நொய்யல் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் ஓரிரு நாட்க ளில் இந்த குளங்கள் நிரம்பி விடும். அதை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story