பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வை தொடங்கினார். இந்த ஆய்வின் போது ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணைத்தலைவர் பர்கத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், மேலாளர் ஸ்ரீராம் காந்தி மற்றும் பலருடன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், ஆதிதிராவிடர் நல நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆதிதிராவிடர் பகுதிகளுக்கான கிராம சாலைகள் மற்றும் பல்வேறு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் திடீரென ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளியூரில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.63 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தையும் பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன் குணசேகர், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எத்திராஜ், சரத்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.