பூண்டி மாதா பேராலய தேர்பவனி
ஆண்டு பெருவிழாவையொட்டி பூண்டி மாதா பேராலய தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி தொடங்கி வைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி:
ஆண்டு பெருவிழாவையொட்டி பூண்டி மாதா பேராலய தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி தொடங்கி வைத்தார்.
பூண்டி மாதா பேராலயம்
தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரப்பவனியும், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்று வந்தது.
பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் பங்கு தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோரது நினைவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு திருப்பலி
நேற்று மாலை 6 மணி அளவில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி தலைமையில் மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேர்பவனி
இதை தொடர்ந்து தேர்பவனி நடந்தது. முன்னதாக பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் மின் அலங்கார பெரிய தேரில் பூண்டி மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து தேரை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, கைகளை உயர்த்தி மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி சென்றனர்.
தேர்பவனி தொடங்கிய போது வாணவேடிக்கை நடைபெற்றது
மின்விளக்கு அலங்காரம்
திருவிழா நிறைவு நாளான இன்று (திங்கட்கிழமை) காலை திருவிழா திருப்பலியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி நிறைவேற்றுகிறார்மாலை கொடி இறக்கத்துடன் பூண்டி பேராலய ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.தேர் பவனியை முன்னிட்டு பேராலயம் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.