ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
திருமால் பூமிக்கு தசாவதாரம் எடுத்து வந்தார். அதில் வாமன அவதாரமும் ஒன்றாகும். திருமால், வாமனராக வந்து பூணூல் அணிந்து கொண்டதன் மூலம் அந்த சடங்கு தனக்கு நடந்ததுபோல் பூலோகத்தில் அதை அணிந்துகொள்ள தகுதியான அனைவரும் பூணூல் அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
இதனை ஒவ்வொரு ஆண்டும் வாணியர், பிராமணர்கள், பொற்கொல்லர்கள் என பலர் பின்பற்றி ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் மாற்றம் செய்து கொள்கிறார்கள்.
சிறப்பு வழிபாடு
அதன்படி நேற்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் கைலாசநாதர் கோவில், வைகுண்டவாச பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மற்றும் விழுப்புரம் சங்கரமடம், விஸ்வகர்மா திருமண மண்டபம், சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடம், ஆர்ய வைசிய செட்டியார் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வாணியர், பிராமணர்கள், பொற்கொல்லர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பழைய பூணூலை மாற்றிக்கொண்டு புதிய பூணூல் அணிந்துகொண்டனர். இதேபோல் விக்கிரவாண்டி அகத்தீஸ்வரன் கோவில் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.