பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்


பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 19 Sep 2023 9:00 AM GMT (Updated: 19 Sep 2023 4:26 PM GMT)

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், பைக்கை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார். தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே டிடிஎப் வாசன், நேற்று முன்தினம் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் 'வீலீங்' செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த டிடிஎப் வாசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட போதிலும் அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவருக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் போலீசார், டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் இன்று கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது டிடிஎப் வாசனை 15 நாட்கள் (அக்டோபர் 3-ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார். இதனை தொடந்து டிடிஎப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.


Next Story