அவினாசி, சேவூரில் கடையடைப்பு போராட்டம்
இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் ஆ.ராசாவை, எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி, அவினாசி, சேவூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
சர்ச்சை பேச்சு
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, இந்துக்களின் மனம் புண்படும்படி தொடர்ந்து பேசி வருவதால் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக்கோரி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் நேற்று, முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர்.
ஆனால் இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என்றும், கடைகளை வழக்கம் போல் திறக்க வேண்டும் என்றும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சேவூர்
இருப்பினும் நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேவூர் சுற்றுப்பகுதிகளில் பேக்கரி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து, பால் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன.
மேலும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவினாசி
அவினாசியிலும் இந்து முன்னணி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அவினாசி தெக்கலூர், கருவலூர், பழங்கரை, ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. அவினாசி வட்டாரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுபோல் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியிலும் காலை முதல் மாலை 6 மணி வரை 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.