தமிழக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தினால் விருதுநகர் முதல் கவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள 765/400 கிலோ வாட் உயர் மின் கோபுரத்தால் ஏற்படும் ஆபத்திலிருந்து விவசாயிகளையும் பொது மக்களையும் காப்பாற்ற ஊத்துக்குளி ஒன்றிய தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 2300 ஆண்டு பழமை வாய்ந்த 32 அடி உயர நடு கல் உள்ளது. இதனை முன்பே ஆய்வு செய்த தொல்லியல் துறை கீழடி அருங்காட்சியகத்தில் இது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை பார்வைக்காக வைத்துள்ளது
மேலும் தமிழ்நாட்டில் தொல்லியல் துறைக்கு சொந்தமான 32 இடங்களில் குமரிக்கல்பாளையம் ஒன்றாகும். தற்போது விருதுநகர் முதல் கவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள உயர் மின் கோபுர துணை மின் நிலையத்தால் தொல்லியல் துறைக்கு சார்ந்த இந்த புராதன சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
தாலுகா அலுவலகம் முன்பு
எனவே தொல்லியல் துறைக்கு சொந்தமான குமரிக்கல்பாளையம் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவில் நில எடுப்போ, வேறு திட்ட பணிகளோ, தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் நடைபெறக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கடந்த 16 நாட்களாக விவசாயிகளும் அப்பகுதி பொதுமக்களும் நில உரிமைதாரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுவை பெற்ற பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ சென்னையில் உள்ள தொல்லியல் துறை இயக்குனர் சே.ரா.காந்தியை நேரில் சந்தித்து பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை நேரில் விளக்கினார். இப்பகுதி பொதுமக்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் மேற்கொண்டு உள்ளதோடு ஊத்துக்குளி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள்
அங்கு வந்த பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ இருவரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஊத்துக்குளி தாசில்தார்தங்கவேலு, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
இதனை அடுத்து கலெக்டர் இது தொடர்பாக தொல்லியல் துறையில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் அடிப்படையில் விவசாயிகள் தாலுகா அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர்.






