நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுதூய்மை பணியாளர்கள் போராட்டம்


நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுதூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
திருப்பூர்


உடுமலையில் நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகையிட்டு போராட்டம்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் நாள்தோறும் 33 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று திடீரென 92 தூய்மை பணியாளர்களை பணியில் இருந்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆவேசம் அடைந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

குறைந்த சம்பளம்

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2006 முதல் 17 வருடங்களாக உடுமலை நகராட்சியில் 216 பேர் தூய்மை பணியாளராக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றோம். மேலும் எங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப் தொகையும் தற்போது வரை தரப்படவில்லை. இது குறித்து கேட்டால் அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. இந்த நிலையில் இன்று திடீரென 90- க்கும் மேற்பட்டோருக்கு வேலையில்லை என தெரிவிக்கின்றனர். 125 பேருக்கு மட்டும் வேலை தருவதாக கூறுகிறார்கள். நிறுத்தப்பட்டவர்களுக்கு பாதி சம்பளத்தில் மாற்று வேலை வழங்குவதாக கூறுகிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம்

மேலும் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மட்டுமே முகக்கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்களை வழங்குகிறார்கள். நகரின் சுகாதாரத்தை பேணி காத்து வருகின்ற எங்களை அலட்சியப்படுத்துவது வேதனை அளிக்கிறது. எனவே பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் எங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில் ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். காலையில் தொடங்கிய போராட்டம் இரவு வரையிலும் நீடித்தது. இதனால் உடுமலைப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கோரிக்கை நியாயமானதே

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நியாயமானதே. அதை ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் பணி வழங்குவதற்கு நிர்வாகம் முன் வர வேண்டும். சுகாதாரத்தை பேணுவதில் அவர்களது பங்கு இல்லை என்றால் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவிடும். இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களும் வழங்க வேண்டும்.மேலும் சேதமடைந்த தள்ளு வண்டிகளை முறையாக பராமரிப்பு செய்தும் வழங்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.


Next Story