தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
திருப்பூர்


தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தக்கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தாராபுரம் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அ.காளிமுத்து தலைமையில் 40-க்கு மேற்பட்ட விவசாயிகள் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் காளிமுத்து கூறியதாவது:-

நடைபாதை கடைகள்

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் முன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளால் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் தாராபுரம் அமராவதி ரவுண்டானாவில் இருந்து பூக்கடைகார்னர் வரையிலான ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான தார்ச்சாலையில் அரசு பள்ளிக்கூடம், பொதுத்துறை வங்கிகள், முக்கிய வணிக வளாகங்கள், டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர், உழவர் சந்தை, மருந்தகங்கள் உள்ளன. கடைவீதி செல்வதற்கு முக்கிய பிரதான சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பூக்கடைக்காரனார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடைபாதை கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து நடைபாதையில் வியாபாரம் செய்து வருவதால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் வங்கி பணிகளுக்காக செல்லும் முதியவர்கள். தினந்தோறும் பெரிய கடைவீதிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் ஆகியோர் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

பரபரப்பு

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி தாராபுரம் நகராட்சி ஆணையாளர் ராமர், ஆர்.டி.ஓ. குமரேசன் ஆகியோரிடம் தொடர்ந்து மனு கொடுத்தோம். மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த போது உடனடியாக அமராவதி ரவுண்டானாவில் இருந்து பூக்கடை கார்னர் வரை உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் சாலையோர கடைகளை அகற்றுவது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடைகளை அப்புறப்படுத்த கோரி தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்க வந்தபோது அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story