ஆபாச வீடியோ விவகாரம்; பாதிரியார் மீது நர்சிங் மாணவி பாலியல் புகார்


ஆபாச வீடியோ விவகாரம்; பாதிரியார் மீது நர்சிங் மாணவி பாலியல் புகார்
x

பாதிரியாரின் ஆபாச வீடியோ விவகாரத்தை தொடர்ந்து அவர் மீது நர்சிங் மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின.

பாலியல் தொல்லை

தேவாலயத்துக்கு வரும் பெண்களுடன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ நெருக்கமாக இருந்துள்ளார். அதை அவர் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சில பெண்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தான் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவின் ஆபாச லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாது அவரது லேப்டாப் மற்றும் செல்போனை சிலர் பறித்து சென்றுள்ளனர். அவர்கள் தான் செல்போனில் இருந்த பாதிரியாரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

நர்சிங் மாணவி புகார்

தற்போது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள் ளார். அதில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ வாட்ஸ்-அப் மூலம் பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

2 தனிப்படை அமைப்பு

இதற்கிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தலைமறைவாகி விட்டார். அவர் கேரள மாநிலத்தில் தனது நண்பர் வீட்டில் பதுங்கியிருக்கலாம் அல்லது கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அவரைப்பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் போலீசார் பாதிரியாரின் செல்போன் தொடர்பு எண்கள் மூலமாகவும், செல்போன் சிக்னல் மூலமாகவும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தனிப்படை போலீசார் கேரள மாநில பகுதியிலும், மற்றொரு தனிப்படை பெங்களூரு பகுதிக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். விரைவில் பாதிரியாரை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story