கைதான வாலிபரின் செல்போனில் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள்?
நாகர்கோவிலில் 2-வது முறையாக போக்சோ வழக்கில் கைதான வாலிபர் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அது பாதிக்கப்பட்ட மாணவிகளின் வீடியோக்களா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் 2-வது முறையாக போக்சோ வழக்கில் கைதான வாலிபர் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அது பாதிக்கப்பட்ட மாணவிகளின் வீடியோக்களா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பாலியல் பலாத்காரம்
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது24), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஒரு சிறுமியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதோடு பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்னேஷ் உள்பட 3 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதில் விக்னேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் விக்னேசுக்கு ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது விக்னேஷ் மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆபாச வீடியோக்கள்
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விக்னேஷ் மீது போலீசார் 2-வது முறையாக போக்சோ வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேசின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. அது விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்த மாணவிகளின் ஆபாச வீடியோக்களா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் விக்னேசால் வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.