பஞ்சாலை வாயில் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம்


பஞ்சாலை வாயில் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க கோரி பஞ்சாலை வாயில் முன்பு தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க கோரி பஞ்சாலை வாயில் முன்பு தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சி காய்ச்சும் போராட்டம்

தமிழகத்தில் உள்ள 7 என்.டி.சி. மில்களை திறக்கக்கோரி ஆலை வாயில் முன்பு பஞ்சாலைத்தொழிலாளர்கள் நேற்று கஞ்சி காய்ச் சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கோவை மேட்டுப் பாளையம் ரோட்டில் உள்ள முருகன் மில்ஸ் வாயில் முன்பாக கஞ்சி காய்ச்சும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது, என்.டி.சி. நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து பஞ்சாலை தொழிலாளர்கள் கோஷமிட்டனர். மேலும் பஞ்சாலைகளை உடனே திறக்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். 3 ஆண்டுக்கான போனஸ், இதர பயன்களை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய எச்.எம்.எஸ். மாநில பொதுச்செயலாளர் ராஜாமணி கூறியதாவது:-

திறக்க வேண்டும்

கோவை மாநகரில் கோவை நூற்பு மற்றும் நெசவு ஆலை, ஸ்ரீ முருகன் ஜவுளி, கம்போடியா மில், ஸ்ரீ ரங்க விலாஸ் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பங்கஜா மில் ஆகிய 5 தேசிய பஞ்சாலைகள் (என்.டி.சி.) உள்ளன. இது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயனீர் மில், சிவகங்கை மாவட்டத்தில் காளீஸ்வரா மில் என 7 பஞ்சாலைகள் தமிழகத்தில் உள்ளது.

அந்த ஆலைகளில் 1,800 நிரந்தர மற்றும் 1,200 ஒப்பந்த தொழிலா ளர்கள் என சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவின் போது மூடப்பட்ட பஞ்சாலைகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பஞ்சாலை களில் பணியாற்றிய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

கூட்டுக்குழு முடிவு

எனவே தேசிய பஞ்சாலைகளை திறக்கக்கோரியும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அனைத்துச் சங்க கூட்டு குழு கூடி முடிவெடுத்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story