வீரப்பன்சத்திரம் தபால் அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை பாதிப்பு
ஈரோடு வீரப்பன்சத்திரம் தபால் அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் தபால் அலுவலகத்தில் கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
ஈரோடு வீரப்பன்சத்திரம் தபால் அலுவலகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 16 ரோடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்ட கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தபால் சேவை பாதிக்கப்பட்டது. ஒரு பரிவர்த்தனை மேற்கொள்ள நீண்ட நேரமாகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது கணக்குகளில் பணம் செலுத்தவும், பணத்தை எடுப்பதற்கும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:-
மாதந்தோறும் தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் பணத்தை செலுத்தி வருகிறேன். வீரப்பன்சத்திரம் தபால் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு அங்கு கணினி மெதுவாக செயல்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ஒரு பரிவர்த்தனை செய்வதற்கு நீண்ட நேரமாகிறது. பணத்தை செலுத்த வேண்டுமென்றால் 4 மணிநேரம் வரை ஆகிறது. எனவே கணினி தொழில்நுட்ப கோளாறு சரிசெய்து வழக்கமான தபால் சேவையை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தபால் சேவை
இதுதொடர்பாக தபால் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வீரப்பன்சத்திரம் தபால் அலுவலகத்துக்கு 2 இணையதள இணைப்புகள் உள்ளன. இந்த இணையதள இணைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது. ஆனால் பரிவர்த்தனை செய்வதில் தடை ஏற்படவில்லை. சற்று தாமதமாக தபால் சேவை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு விடுவதாக அவர்களும் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். எனவே விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு வழக்கமான தபால் சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும்", என்றார்.