தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்
தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் தி.நிர்மலாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
மத்திய மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி காலை 11 மணிக்கு திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. தபால் சேவை தொடர்பான குறைகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து தனிப்பட்ட முறையில் கேட்டறிந்து தீர்த்து வைப்பது தான் இந்த முகாமின் நோக்கமாகும். வாடிக்கையாளர்கள் தங்களிடம் ஏதேனும் புகார், குறை இருப்பின், அதை ஜோ.பிரதீப்குமார், உதவி இயக்குனர், (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி என்ற முகவரிக்கு வருகிற 23-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண் மற்றும் பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறித்திருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்து இருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தில் பெயர், அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட கடிதத்தொடர்புகள் ஏதேனும் இருப்பின், அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும். இந்த முகாமுக்கு புகார்களை சாதாரண தபாலிலோ அல்லது பதிவு தபாலிலோ மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். தனியார் சேவை மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. தபால் உறையின் முன்பக்க மேல் பகுதியில், 'தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன்-2023' என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.