தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தபால் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டி.ஏ. நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன் தேசிய தபால் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கோட்ட செயலாளர் ராஜகோபால், பொருளாளர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தேசிய தபால் ஊழியர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:-
தபால் பட்டுவாடா பாதிப்பு
தபால் துறையை தனியார் மயமாக்குவதை கைவிடுவது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் தலைமை தபால் நிலையங்கள் மற்றும் 47 கிளை தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் 70 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை.
வேலை நிறுத்தம் காரணமாக தபால் பட்டுவாடா பாதிக்கப்பட்டதால், தபால்கள் தேக்கமடைந்தன. மேலும் தபால் நிலையங்களில் பணம் எடுத்தல், செலுத்துதல் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் காப்பீடு, ஆதார் சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.