அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2 லட்சம் தபால்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தேக்கம்


அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி    தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்    2 லட்சம் தபால்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தேக்கம்
x

அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 லட்சம் தபால்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

விழுப்புரம்


வேலைநிறுத்தம்

அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிற்சங்க நிர்வாகிகளின் சேவை காலம் முழுவதற்கும் 2 முறைதான் செயலாற்றிட முடியும் என்ற தடையை விலக்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், அஞ்சல், ஆர்.எம்.எஸ். அலுவலகங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 150 துணை அஞ்சலகங்கள், 800 கிளை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தபால் ஊழியர்கள் சுமார் 1,200 பேர் பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தபால் பட்டுவாடா பாதிப்பு

இதன் காரணமாக தலைமை தபால் நிலையங்கள், துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்கள் மற்றும் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தபால் பட்டுவாடா செய்யும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தபால் நிலையங்களுக்கு வந்திருந்த தபால்கள் அனைத்தும் பிரிக்கப்படாமல் மூட்டை, மூட்டையாக கிடந்தன. இவர்களின் வேலை நிறுத்தத்தினால் சுமார் 2 லட்சம் தபால்கள் நேற்று பட்டுவாடா செய்யப்படாமல் தேக்கம் அடைந்தன. இதுதவிர மணியார்டர் சேவை, சிறுசேமிப்பு, காப்பீடு, பேமெண்ட் வங்கி சேவை, பாஸ்போர்ட் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் தபால் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தத்தையொட்டி விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். தலைவர்கள் வெங்கடபாலகிருஷ்ணன், தமிழ்மணி, செயல் தலைவர்கள் ஜெயசெல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் வாசு, சேகர், கலியமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர், கணபதி சுப்பிரமணியன், பாண்டியன், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story