சுவரொட்டிகளால் அலங்கோலமாக மாறிய அரசு அலுவலக சுவர்
மடத்துக்குளம் பகுதியில் தாறுமாறாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அரசு அலுவலக சுற்றுச் சுவர் அலங்கோல நிலையில் உள்ளது.
அனுமதியில்லாத சுவரொட்டிகள்
சுவரொட்டிகளால் அலங்கோலமாகும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சுவரொட்டிகள் என்பவை சுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சொல்லலாம். சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஓட்டுவதற்கு தடை உள்ளது. ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் அத்துமீறும் நிலையே உள்ளது. அதுபோல மடத்துக்குளம் பகுதியிலும் சுவர்கள், பாலங்களின் தடுப்புச் சுவர்கள், மின் கம்பங்கள் என பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது, அனுமதியில்லாமல் விளம்பரப் பதாகைகள் அமைத்தல் போன்ற அத்துமீறல்கள் நடைபெற்று வருகிறது.
விபத்துக்கள்
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் உள்ளது. இதே வளாகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தின் சுற்றுச் சுவர்களில் தனியார் நிறுவனங்களின் கல்வி, வேலை வாய்ப்புகள், பாலியல் தொடர்பான மருத்துவர்கள், அரசியல் கட்சி விளம்பரங்கள் என பலவிதமான விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த சுவர் முழுவதும் அலங்கோலமாக காணப்படுகிறது. இந்த சுவரொட்டிகள் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறச் செய்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள சுவரொட்டிகளை முழுமையாக அகற்றி சுவரை சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் விழிப்புணர்வு வாசகங்கள், பொதுமக்களுக்கான தகவல்கள் அல்லது கண்கவர் இயற்கை காட்சிகள் போன்றவற்றை வரைந்து சுவரை அழகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் மடத்துக்குளம் பகுதி முழுவதும் அனுமதியில்லாமல் சுவரொட்டிகள் ஒட்டுவதையும், ஆபத்தான நிலையில் விளம்பரப் பதாகைகள் அமைப்பதையும் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.