எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு கரூர் மேற்கு மாவட்ட, மாநகர அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களுடன் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் போஸ்டர்கள் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில் கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் அ.தி.மு.க.வை 8 முறை படுதோல்வி பெறச்செய்து ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசைப்படும் எடப்பாடியை கண்டிக்கிறோம்.
வெளியேறு, வெளியேறு அ.தி.மு.க. சட்ட விதிக்கு முரணாக சமத்துவ பேரியக்கத்தை தனது இயக்கமாக மாற்றிய எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு இப்படிக்கு கரூர் மேற்கு மாவட்ட, மாநகர அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்களை யார்? ஒட்டினார்கள் என தெரியாத நிலையில், இந்த போஸ்டர் இரவில் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு குழுவினர் போஸ்டர் ஒட்டப்பட்ட சுவடு தெரியாமல் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். மேலும் இதுகுறித்தான போஸ்டர் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.