"அதிமுகவில் ஒற்றை தலைமை எதிரொலி" பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.. அதிமுக-வில் சலசலப்பு
அதிமுகவுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வலியுறுத்தி, சென்னையின் முக்கிய இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சென்னை,
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுக்குழுத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஒற்றைத் தலைமை: இந்தக் கூட்டம் நடைபெற்றபோது, கட்சி அலுவலகத்தின் வெளியில் இருந்த தொண்டர்கள் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அதிமுக முன்னாள் அமைச்சர், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில், அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில், " மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே , ஒற்றை தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வாருங்கள்" என்றும், " தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமை ஓபிஎஸ் தலைமையே" என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.