ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி படத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி படத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் ஒற்ைறத்தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என்று தினமும் ஒவ்வொருவராக பேட்டி கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் எந்த பொறுப்பிலும் இல்லாத அடிமட்ட தொண்டர்கள் மனதில் என்ன உள்ளது என்று யாருக்கும் தெரியவில்லை.இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ்நிலையம், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த சுவரொட்டியில், இரட்டை இலையில் ஒரு இலையில் ஓ.பன்னீர்செல்வம், மற்றொரு இலையில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து சுவரொட்டியில் போட்டு "தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளது.தமிழகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த சுவரொட்டிகள் திருச்சியில் தற்போது பேச்சு பொருளாக மாறி இருக்கிறது.அதே சமயம் இந்த சுவரொட்டிகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் எப்படியாவது ஒன்று சேர்த்து அ.தி.மு.க. என்கிற கட்சியை உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமும், திட்டமுமாக இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.