முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வாயிற்கூட்டம்
x

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை பணிக்கு செல்வதற்கு முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிலம்பரசன், அமைப்பு செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசினர். கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், பிரசார செயலாளர் வடிவேல்முருகன், மாநில உதவி பெறும் பள்ளி செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முதுநிலை ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டி.ஏ. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உடனடியாக வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். 1.6.2009 முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்திட வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை ரத்து செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக கழகத்தின் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் இணைச்செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.


Next Story