கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கோரிய நளினி மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு


கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கோரிய நளினி மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
x

கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதை கவர்னர் பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார்.

அதில், அமைச்சரவை தீர்மானம் இயற்றி நாள் முதல் சிறையில் என்னை அடைத்திருப்பது சட்டவிரோதம். அதனால், கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், என்னை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்சு விசாரித்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமும், நளினி தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணனும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

தள்ளுபடி

இதேபோல, மருத்துவ காரணத்துக்காக தன் கணவர் முருகனுக்கு 6 நாள் பரோல் கேட்டு அனுப்பிய கோரிக்கை மனுவை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பரோல் கேட்டு அனுப்பிய கோரிக்கை மனுவை அரசு ஏற்கனவே நிராகரித்து விட்டதாக அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா கூறினார். இதையடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக நளினி தரப்பு வக்கீல் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story