தஞ்சையில், மண்பானை விற்பனை மும்முரம்


தஞ்சையில், மண்பானை விற்பனை மும்முரம்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மண்பானைகள் ரூ.150 முதல் ரூ.1,000 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மண்பானைகள் ரூ.150 முதல் ரூ.1,000 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, புதிய மண்பானையில் பச்சரிசி கொண்டு பொங்கல் வைப்பார்கள்.

அதிலும், புதிய பானைக்கு மாலை, மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொங்கல் பொங்கி வரும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல்! என கூறி மகிழ்ச்சியை வெளிபடுத்துவர். இதனையடுத்து பொங்கிய பொங்கலை சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து வழிபடுவார்கள்.

மண்பானை விற்பனை

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை சரபோஜி மார்க்கெட் பகுதி, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் முக்கிய வீதிகளில் மண்பானை விற்பனையை வியாபாரிகள் தொடங்கி உள்ளனர்.

அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மண்பானை விற்பனை நாளுக்கு, நாள் அதிகரிக்கும் என்ற உற்சாகத்தில் வியாபாரிகள் ஆங்காங்கே புதிதாக கடைகளையும் தொடங்கியுள்ளனர்.

மக்கள் ஆர்வம்

இதுகுறித்து கீழவாசல் பகுதியை சேர்ந்த மண்பானை வியாபாரி சண்முகவேல் கூறுகையில்:- மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பானை விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை தாங்கிபிடிக்கும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகைக்கு தனி இடம் உண்டு. இந்த ஆண்டு மண்பானைகளின் விலை ரூ.150-ல் இருந்து ரூ.1000 வரை உள்ளது. அளவை பொறுத்து மண்பானைகளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, விருத்தாசலம், செங்கிப்பட்டி, நெய்வேலி மற்றும் தஞ்சை குயவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண்பானைகளை கொள்முதல் செய்து வந்துள்ளேன். வழக்கத்தைவிட இந்த ஆண்டு பொதுமக்கள் அதிக ஆர்வமுடன் மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மண்பானை விற்பனை இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறினார்.


Next Story