ரோட்டின் ஓரங்களில் பல மாதங்களாக பள்ளம்: போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நெரிசலை அதிகமாக்கும் அதிகாரிகள்- சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேலும் நெரிசலை அதிகமாக்கும் வகையில் அதிகாரிகள் பணி செய்வதால் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கிறார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேலும் நெரிசலை அதிகமாக்கும் வகையில் அதிகாரிகள் பணி செய்வதால் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கிறார்கள்.
சாலை மேம்பாட்டு பணி
ஈரோடு மாநகர் பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியின் இந்த பணி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மூலம் செய்யப்படுகிறது. ஈரோடு மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக வீட்டுவசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கி உள்ளனர். ஆனால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலேயே பணிகள் நடந்து வருகின்றன.
குறிப்பாக ஈரோடு ஈ.வி.என். ரோடு, கடைவீதி, காந்திஜி வீதி உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேலும் மேலும் நெரிசலை அதிகப்படுத்தும் பணிகளைத்தான் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
வாகன ஓட்டிகள்
காந்திஜி ரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முதல் காளைமாடு சிலை வரை சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாக கிடக்கிறது. அங்கு பணிகள் 50 சதவீதம் கூட முடியாத நிலையில் தினசரி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்று, சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் விபத்து ஏற்படும் என்று காந்திஜி ரோடு நெரிசல் மிகுந்து உள்ளது.
குறுக்கு சாலைகளின் முகப்பு பகுதிகள் பலவும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் எங்கும் திரும்ப கூட முடியாத வகையில் வாகனங்கள் ஒரே சாலையில்தான் சென்றாக வேண்டும். இதனால் பன்னீர்செல்வம் பூங்கா முதல் காளைமாடு சிலை வரை வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது.
போராட்டம்
திங்கட்கிழமைகளில் கூடும் ஜவுளி சந்தைக்கு வரும் அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மீண்டும் போக்குவரத்து சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நேற்று ஈரோடு அரசு மகளிர் பள்ளிக்கூடத்தை ஒட்டி குழி தோண்டும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று காந்திஜி ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த திட்டமிட்டு இதுபோன்ற பணிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஈரோடு மாநகர் முழுவதும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் சமூக அமைப்புகள், வியாபாரிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.