மண்பாண்டங்கள் தயாரிப்பு பணி தீவிரம்


மண்பாண்டங்கள் தயாரிப்பு பணி தீவிரம்
x

மண்பாண்டங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

மண்பாண்டங்கள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி, அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமையிடமாக உள்ளது. இங்கு மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் களிமண்ணை பயன்படுத்தி மண்பானை, மண்சட்டி, அடுப்பு, அகல் விளக்குகள், மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டி, மண்குடம் (தோன்டி), கும்பாபிஷேக கலயம் உள்பட மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அந்த மாதத்தில் அகல் விளக்குகள் தயாரிப்பதிலும், அதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி புதிய மண் பானை உள்பட பல மண்பாண்ட பொருட்களை தயாரிப்பதிலும் மும்முரமாக ஈடுபடுவது வழக்கம்.

தயாரிப்பு பணி தீவிரம்

இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தற்போது பலர் சில்வர், வெண்கல பாத்திரங்களில் பொங்கலிடும் நிலை இருந்தாலும், மரபு மாறாமல் அரிசிமாவில் கோலமிட்ட புதிய மண்பானையில் பொங்கலிடுபவர்களும் உள்ளனர். இதற்காக பொதுமக்கள் புதிய மண் பானைகள், சட்டிகள், அடுப்பு போன்றவற்றை வாங்குவார்கள்.

இதனால் தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானை, மண் சட்டி, அடுப்பு போன்றவற்றை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், அடுப்புகள் போன்றவற்றை காயவைத்து, பின்னர் சூளையிலிட்டு சுட்டு எடுத்து, அவற்றை தயார் செய்து வருவதோடு, விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்

விற்பனை

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், மண்பானைகள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். மேலும் தற்போது தயார் செய்யப்பட்ட மண்பாண்டங்களையும் விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் வியாபாரிகள் மொத்தமாகவும் மண்பாண்டங்களை வாங்கிச்செல்கின்றனர். சில்லறை விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறோம்.

இதில் ஒரு மண்பானை அளவை பொறுத்து சிறியது ரூ.60, நடுத்தர அளவில் உள்ளது ரூ.100, பெரிய அளவிலானது ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது. கொடி அடிப்பு ஒன்று ரூ.250-க்கும், தட்டு அடுப்பு ரூ.150-க்கும், தனி அடுப்பு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.

பொங்கல் பரிசு தொகுப்பில்...

தற்போதைய நவீன காலகட்டத்தில் பொதுமக்களிடம் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் மண்பாண்ட தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படுகிறது. அதில் மண்பானைகளையும் சேர்த்து வழங்கினால் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். எனவே அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story