ஆராய்ச்சியாளர்களுக்காக காத்திருக்கும் மண்பானைகள்


ஆராய்ச்சியாளர்களுக்காக காத்திருக்கும்  மண்பானைகள்
x

சிவகாசி அருகே ஆராய்ச்சியாளர்களுக்காக மண்பானைகள் காத்திருக்கிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே ஆராய்ச்சியாளர்களுக்காக மண்பானைகள் காத்திருக்கிறது.

அகழாய்வு பணி

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை எட்டு அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட சங்கு வளையல்கள், பெண்கள் அணியும் தொங்கட்டான், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், மண் குவளை, பெண்கள் அணியக்கூடிய கழுத்தணி பதக்கம், தாயக்கட்டைகள், சதுரங்க கட்டைகள் ஆகியவை கிடைத்துள்ளன.

கலைநயத்துடன் செய்யப்பட்ட தீப விளக்குகள், அகல்விளக்குகளும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. பெரும்பாலான பொருட்கள் சங்கினாலும், யானை தந்தத்தாலும் செய்யப்பட்டுள்ளன.

கடல் வழி வாணிபம்

இதனை பார்க்கும்போது பழங்காலத்தில் வைப்பாற்றின் வழியாக முன்னோர்கள் கடல் வழிவாணிபத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பண்டைய காலத்தில் முதியோர்கள் பயன்படுத்தி வந்த புகைபிடிப்பான் கருவிகள் சேதமடையாமல் கிடைத்துள்ளன. கடந்த 10 தினங்களுக்கு முன்பு 5 மற்றும் 6-வது அகழாய்வு குழிகளில் சிறிய அளவிலான 6 மண்பானைகள் சேதமடையாமல் கிடைத்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் சேதமடையாமல் எடுப்பதற்காக குழிக்குள் குடங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய தகவல்

இக்குடங்கள் திறக்கப்பட்டால் குடத்தில் என்ன பொருள் இருக்கிறது என்பதையும் எந்த ஆண்டில் வைப்பாற்றில் கரையில் மக்கள் வசித்து உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள முக்கியமான தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆகையால் ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து முழுமையாக ஆய்வு பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story