மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை கேட்டு மண் பானைகளுடன் வந்து மனு கொடுத்த மண்பாண்ட தொழிலாளர்கள்


மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை கேட்டு மண் பானைகளுடன் வந்து மனு கொடுத்த மண்பாண்ட தொழிலாளர்கள்
x

மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை கேட்டு மண் பானைகளுடன் வந்து மனு கொடுத்த மண்பாண்ட தொழிலாளர்களால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் மற்றும் வேப்பந்தட்டை தாலுகா, பாண்டகபாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் நூதனமாக மண் பானைகளுடன் மனு கொடுக்க வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், பாளையம், பாண்டகபாடி ஆகிய கிராமங்களில் காலம் காலமாக மண்பாண்ட தொழில் செய்யும் எங்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரண பராமரிப்பு உதவித்தொகை கிடைக்கவில்லை. மேலும் நவீன மின்சார திருவை வழங்கப்படவில்லை. இதில் சிலருக்கு மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டையும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் பலமுறை நேரில் சந்தித்தும், அவர்கள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மேற்கண்ட அனைத்து சலுகைகளையும் மண்பாண்ட தொழில் செய்யாதவர்கள் பெற்று வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உண்மையாக மண்பாண்ட தொழில் செய்யும் எங்களுக்கு ஆண்டுதோறும் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையும், மின்சார திருவையும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு வந்து கலைந்து சென்றனர்.


Next Story