கோழி இறைச்சி விலை கிடுகிடு உயர்வு


கோழி இறைச்சி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 14 May 2023 2:00 AM IST (Updated: 14 May 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவு காரணமாக கோவையில் கறிக்கோழி இறைச்சி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ இறைச்சி ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

வரத்து குறைவு காரணமாக கோவையில் கறிக்கோழி இறைச்சி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ இறைச்சி ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அசைவ உணவு

அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் விதவிதமான அசைவ உணவுக ளை சாப்பிட விரும்புபவர்கள், அவற்றை ஓட்டல்களில் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைத்து சாப்பிடுகின்றனர்.

ஆனாலும் அசைவ உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதற்கு தனிச்சுவை உள்ளது என்பதை மறுக்க முடியாது.

தற்போது ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக உள்ளது. இதனால் கோழி இறைச்சி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஆனால் வரத்து குறைவாக இருப்பதால் கோழி இறைச்சியின் விலை அதிகரித்து உள்ளது.

கிலோ ரூ.240-க்கு விற்பனை

அதன்படி கடந்த மாதம் வரை கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.200-க்கு விற்றது. ஆனால் நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.40 வரை விலை உயர்ந்து கோழி இறைச்சி ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து கோழி இறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகி ரமேஷ் கூறியதாவது:-

கோவை மாநகரில் 850 கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில் தினமும் 30 டன் வரை கோழி இறைச்சி விற்பனை நடைபெறும். ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் 80 டன் வரை கோழி இறைச்சி விற்பனையாகும்.

மீன்பிடி தடை காலம்

தற்போது கோடை வெயில் என்பதால் இறைச்சிக்கோழியின் உற் பத்தி குறைந்து உள்ளது. மேலும் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. இதனால் மீன்வரத்து குறைந்து உள்ளது. இதனால் கோழி இறைச்சி நுகர்வு அதிகரித்து உள்ளது.

இதுதவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அதிகளவு கோழி இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கோவைக்கு கோழி இறைச்சியின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story