ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்
ஆனைமலையில் உள்ள ஆற்றில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை
ஆனைமலையில் உள்ள ஆற்றில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
6 டன் குப்பைகள்
ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 50 ஆயிரத்துகும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் தினந்தோறும் 6 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நரசிம்மநகர் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆழியாற்றில் இறைச்சி கழிவுகள்
இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கோழி இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை ஆனைமலை பகுதியில் உள்ள ஆழியாற்றில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் ஆற்று நீர் மாசடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதையடுத்து ஆற்றில் இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரவு நேர காவலாளிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும் சிலர் ஆற்றில் இறைச்சி, ஓட்டல் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.
நோய் பரவும் அபாயம்
ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் ஆற்று பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆற்று நீரை குடிக்கும் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஆற்றில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபராதம்
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் கூறியதாவது:-
ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோழி இறைச்சி கழிவு மற்றும் ஓட்டல் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதனை மீறி ஆழியாற்றில் கழிவுகளை கொட்டினால் ஓட்டல் மற்றும் இறைச்சி கடை உரிமம் ரத்து செய்வதோடு, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் கழிவுகளை ஆற்றில் கொட்ட பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்