ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்


ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துரித மின் இணைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும், பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

10 சதவீத பங்களிப்பு தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளாக இருக்க வேண்டும். விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.25 ஆயிரம், 7.5 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.27 ஆயிரத்து 500 மற்றும் 10 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரம், 15 குதிரைத்திறன் மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை வங்கி வரைவோலையாக அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணபத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story