11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தர்ணா
மின்சார வாரிய பணிகளை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சி.ஐ.டி.யு. தர்ணா போராட்டம் நடந்தது.
சென்னை,
மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல், மின்சார வாரிய பணிகளை இ-டெண்டர் முறையில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது, கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலக வாசலில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் பங்கேற்ற சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் தமிழக மின்சாரத்துறையும் பாதிக்கப்படுகிறது. தற்போது மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தையே 3 ஆக பிரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மட்டுமின்றி, மின்சார வாரிய பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சமூக திட்டங்களால் இழப்பு
இந்த நிலையை அனுமதித்தால் நிரந்தர பணி என்பதே இல்லாமல் போகும். இப்போதே வல்லூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனைவருமே தற்காலிக பணியாளர்கள் தான். இதுமட்டுமின்றி திட்டத்தை தாமதப்படுத்தியும், மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதன் மூலமாகவும் செலவை அதிகரிக்கிறார்கள். சமூக திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு செலவாக பார்க்கக்கூடாது.
இந்த பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை ரூ.202 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில், சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.