மின் வாரிய பணியாளர்கள் கோரிக்கை விளக்க நுழைவு வாயிற் கூட்டம்


மின் வாரிய பணியாளர்கள் கோரிக்கை விளக்க நுழைவு வாயிற் கூட்டம்
x

மின் வாரிய பணியாளர்கள் கோரிக்கை விளக்க நுழைவு வாயிற் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

மின் வாரிய பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க மின் வாரிய நிர்வாகம் இதுவரை முன் வரவில்லை. எனவே கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வருகிற 28-ந்தேதி மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் ஒன்று திரண்டு சென்னை மின் வாரிய தலைமையகத்தில் இருந்து தலைமை செயலகத்தை (கோட்டை) நோக்கி பேரணியாக சென்று மனு அளிக்க உள்ளனர். பேரணியின் நோக்கத்தை விளக்கி பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் கோரிக்கை விளக்க நுழைவு வாயிற் கூட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் 1.12.2019 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு, பொறியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். பி.பி.நம்பர் 2 நாள் 12.4.2022-ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும். அரசாணை 100 அடிப்படையில் பணியாளர்கள் ஏற்று கொள்ளுகின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும். 22.2.2018-ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதித்திட வேண்டும். 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட் சோர்சிங் முறைக்கு விடக்கூடாது. மறுபகிர்வு முறைக்கு செல்லக்கூடாது. இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்க கூடாது. தேர்தல் வாக்குறுதியின்படி பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் வருகிற 28-ந்தேதி சென்னை கோட்டையை நோக்கி செல்லவுள்ள பேரணியில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story