சியாமுத்துப்பட்டி கிராமத்தில் அடிக்கடி மின்வெட்டு

சியாமுத்துப்பட்டி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சிங்கம்புணரி,
சியாமுத்துப்பட்டி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஒன்றிய குழு கூட்டம்
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சாதாரண ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.27 லட்சத்து 30 ஆயிரத்து 940-க்கான 20 தீர்மானங்களை அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ மன்ற பொருளாக வாசித்து ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன் வைக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சியாமுத்துப்பட்டி கிராமத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பல முறை புகார் தெரிவித்தும் மின்சாரம் சீராக வினியோகம் செய்யப்படுவதில்லை.
மின்வெட்டு
கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வெட்டை தவிர்த்து சீரான மின்சாரம் வழங்கவும், மின்பாதைகளை சீரமைக்கவும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரான மின்சாரம் வழங்கப்படும் என கூறினர். மேலும் கோழிக்குடிப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜ், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து கிராமங்களில் ஏற்பட்டு வரும் மர்ம காய்ச்சல் சம்பந்தமாக விழிப்புணர்வுகளை அவர் எடுத்துரைத்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்
தொடர்ந்து மன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்கள் ஒன்றிய குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன்றிய குழு துணைத் தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி அன்புச்செழியன், ரம்யா செல்வகுமார், உமா சோனமுத்து, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரிய கருப்பிமுத்தன், இளங்குமார், சசிகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், உறுப்பினர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






