பவர் டேபிள் கட்டணம் நாளை முதல் உயர்கிறது


பவர் டேபிள் கட்டணம் நாளை முதல் உயர்கிறது
x
திருப்பூர்


பவர் டேபிள் கட்டணம் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் உயர்வு ஏற்கனவே அறிவித்த ஒப்பந்தப்படி கூடுதலாக 7 சதவீதம் கட்டண உயர்வு வழங்க வேண்டும் என்று பவர் டேபிள் சங்கம் அறிவித்துள்ளது.

பவர் டேபிள் நிறுவனங்கள்

உள்நாட்டு பனியன் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்து கொடுக்கும் ஜாப்-ஒர்க் நிறுவனங்களான பவர் டேபிள் நிறுவனங்கள் திருப்பூரில் அதிகம் உள்ளன. பிராண்டட் மற்றும் உள்நாட்டு விற்பனை ஆடைகளை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப்-ஒர்க் முறையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றன. இவ்வாறு பனியன் ஆடைகளை தைத்து கொடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்டண ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. பனியன், பேக் பட்டி டிராயர், பேக் பட்டி டபுள் பாக்கெட் ரகங்களுக்கு தனித்தனியே கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி முதல் ஆண்டுக்கு 17 சதவீதம் கட்டண உயர்வு வழங்கப்பட்டது.

பவர் டேபிள் கட்டணம் நாளை முதல் உயர்கிறது

அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறை கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பவர்டேபிள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பனியன் தையலுக்கு ஒரு டஜனுக்கான கட்டணம் ரூ.76.05-ல் இருந்து நாளை முதல் ரூ.81.37 ஆக உயர்கிறது. பேக் பட்டி டிராயர் கட்டணம் ரூ.146.75 ஆக இருந்தது. இனி ரூ.157.02 ஆக உயர்கிறது. பேக் பட்டி டபுள் பாக்கெட் கட்டணம் ரூ.154.64-ல் இருந்து ரூ.165.46 ஆக உயர்வதாக அறிவித்துள்ளது.

புதிய கட்டணம்

இதுகுறித்து பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் கூறும்போது, 'கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி 4 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. முதல் ஆண்டு நிறைவடைந்ததால், தற்போதைய கட்டணத்தில் இருந்து 7 சதவீதம் உயர்த்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்க வேண்டும். சைமா உறுப்பினர் நிறுவனங்கள், புதிய கட்டணத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்ற செலவு அதிகரித்துள்ளதால் பவர் டேபிள் நிறுவனங்களுக்கான 7 சதவீத கட்டண உயர்வை நாளை முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்' என்றார்.


Next Story