லோயர்கேம்ப்பில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி


லோயர்கேம்ப்பில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி
x
தினத்தந்தி 31 Aug 2023 7:45 PM GMT (Updated: 31 Aug 2023 7:46 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப்பில் மீண்டும் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

தேனி

லோயர்கேம்ப் மின்நிலையம்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை இல்லை இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மதுரை குடிநீர் திட்டத்திற்காக லோயர்கேம்ப் குருவனூற்று பாலம் வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றதால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாவுக்கு 150 கனஅடி வீதம் நேற்று முன்தினம் குறைக்கப்பட்டது. அந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கூடுதல் தண்ணீர் திறப்பு

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடியிலிருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 266 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 300 கன அடியாகவும் இருந்தது. கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story