கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது


கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
x

வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகள் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 7-ந் தேதி வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணியில் இந்திய மற்றும் ரஷியா விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலோடு நேற்று மதியம் 2.30 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 240 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனை எட்டும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

கூடங்குளம் 2-வது அணு உலையில் 5-வது தடவையாக வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிவடைந்து 76 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதற்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய மும்பை இந்திய அணுசக்தி கழகத்தினர், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தினர், ரஷிய அமைப்பினர், ஒப்பந்த பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கூடங்குளம் 1, 2-வது அணு உலைகள் மூலம் இதுவரை 86 ஆயிரத்து 128 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story