ராமநாதபுரம்-மண்டபம் ரெயில் மின்வழிப்பாதை பணிகள் தாமதம்


ராமநாதபுரம்-மண்டபம் ரெயில் மின்வழிப்பாதை பணிகள் தாமதம்
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:47 PM GMT)

கடற்படை விமானதள சிக்னல் பிரச்சினையால் ராமநாதபுரம்-மண்டபம் ரெயில் மின்வழிப்பாதை பணிகள் தாமதமாகி உள்ளது.

ராமநாதபுரம்

கடற்படை விமானதள சிக்னல் பிரச்சினையால் ராமநாதபுரம்-மண்டபம் ரெயில் மின்வழிப்பாதை பணிகள் தாமதமாகி உள்ளது.

மின்வழிப்பாதை

பிரதமர் மோடியின் கனவு திட்டமாக நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் மின்மயமாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை-ராமேசுவரம் இடையேயான 161 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மதுரை-மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் ரெயில்பாதை மின்பாதையாக மாற்றி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து மானாமதுரை-மண்டபம் இடையேயான 96 கிலோ மீட்டர் தூரத்திலான ரெயில்பாதை மின்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. 9.5 மீட்டர் உயரம் முதல் 10.6 மீட்டர் உயரத்திலான மின்கம்பங்கள் அமைத்து மின் கேபிள்கள் பதிக்கும் பணி ராமநாதபுரம் வரை முடிவடைந்து அதிர்வுகளை தாங்கும் வகையிலான தண்டவாளங்கள் மாற்றப்பட்டன.

துணை மின் நிலையம்

மானாமதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான இந்த 60 கிலோ மீட்டர் மின்பாதை பணியில் 18 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 257 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி தற்போது மின்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரையில் இருந்த மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சப்ளை 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை மட்டுமே கொடுக்க முடியும் என்பதால் முதல்கட்டமாக மின்வழிப்பாதையில் சரக்கு ரெயில்கள் மட்டுமே ராமநாதபுரம் வரை இயக்கப்படுகிறது.

பயணிகள் ரெயில் இயக்க மின்சப்ளை தேவைப்படுவதால் மானாமதுரை மற்றும் ராமநாதபுரத்தில் உயர்மின்அழுத்த துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த துணைமின் நிலைய பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளன. இப்பணிகள் முடிவடைந்ததும் மதுரையில் இருந்து மானாமதுரை, ராமநாதபுரம் துணை மின்நிலையங்கள் மூலம் மின்சப்ளை செய்து பயணிகள் ரெயில் இயக்கப்பட உள்ளது.

சிக்னல் பிரச்சினை

இந்நிலையில் ராமநாதபுரம் முதல் மண்டபம் வரையிலான மின்வழிப்பாதை பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உச்சிப்புளி பகுதியில் கடற்படை விமான தளம் அமைந்துள்ளதால் விமானங்கள் இறங்குவதற்கும், பாதுகாப்பு தகவல் தொடர்பு சிக்னல் பெறுவதிலும் மின்பாதை உயர்மின் அழுத்த கம்பிகளால் பிரச்சினை ஏற்படும் என கருதப்படுகிறது.

இதன்காரணமாக கடற்படை விமான தளம் சார்பில் மாற்றுப்பாதையில் மின்வழிப்பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் வழிகாணப்பட்டு மின்வழிப்பாதை அமைக்கப்படும் என்றும் ரெயில்வே உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து ராமநாதபுரம் கவுன்சிலர் ராஜாராம்பாண்டியன் கோபால் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வரை மின் பாதை அமைக்கப்படாததால் டீசல் என்ஜின் இயக்கப்படுகிறது. இந்த பணி விரைந்து முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில் உச்சிப்புளி கடற்படை விமான தளத்தையொட்டி ரெயில் பாதை செல்வதால் விமானதள சிக்னல் பிரச்சினை ஏற்படும் என்று கருதப்படுவதால் மாற்றுப்பாதையில் மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்று ஆட்சேபிப்பதாக தகவல் வருகிறது. விரைவில் ரெயில்வே துறை இதுகுறித்து முடிவு செய்து பணிகளை முடிக்க வேண்டும்.

ராமநாதபுரம் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நாகேசுவரன்:- ரெயில்வே துறையை பொறுத்தவரை தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் அகல ரெயில் பாதை அமைத்த பின்னரே மதுரை-ராமேசுவரம் இடையே அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

அனைத்து வழித்தடங்களும் மின்மயமான நிலையில் கடைசியாக இந்த வழித்தடம் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது விமான தளம் அருகில் உள்ளதால் மாற்றுப்பாதை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் டீசல் என்ஜினில் ரெயில் இயக்கப்படுகிறது. விரைவில் ராமநாதபுரம்-மண்டபம் இடையே மின் பாதையாக மாற்றி ரெயில்களை ராமேசுவரம் வரை இயக்க வேண்டும். இப்பகுதி பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.


Next Story