குளித்தலை நகரப்பகுதி முழுவதும் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்


குளித்தலை நகரப்பகுதி முழுவதும் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
x

குளித்தலை நகரப்பகுதி முழுவதும் சாலையின் குறுக்கே தாழ்வாக ெசல்லும் மின்கம்பிகளால் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. எனவே இதனை சரி செய்ய பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

மின்தடை

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து பெரிய பாலம் செல்லும் வழியில் தென்கரை வாய்க்கால் ஒட்டியுள்ள சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பத்தின் எதிர்ப்பகுதியில் பல்வேறு கடைகள் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு மற்றும் கடைகளுக்கு தேவையான மின்சாரம் பெறுவதற்கு அந்த குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து சாலையை கடந்து எதிரே உள்ள மின்கம்பத்தில் மின் கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. சாலையின் குறுக்கே தாழ்வாக மின் கம்பிகள் செல்வதால் இச்சாலையில் பயணிக்கும் உயரமான வாகனங்கள் செல்லும் பொழுது அந்த மின் கம்பிகள் அந்த வாகனங்களில் பட்டு துண்டிக்கப்படுகின்றன.

இதனால் அந்த குடியிருப்பு, கடைகளுக்கு மட்டும் மின்சாரம் தடைபடுகிறது. துண்டிக்கப்பட்ட மின்கம்பிகளுக்கு பதிலாக புதிய கம்பிகள் பொருத்த அவர்கள் கணிசமான தொகையை செலவிடவேண்டியுள்ளது. இதன் காரணமாக குடியிருப்புகள் மற்றும் கடைகள் இருக்கும் பகுதியிலேயே மின்கம்பங்கள் அனைத்து மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

கோரிக்கை

இதனை அடுத்து குளித்தலை மின்வாரிய அலுவலகம் மூலம் இந்த குடியிருப்பு மற்றும் கடைகள் உள்ள பகுதிகளை ஒட்டி மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் வினியோகம் வழங்கும் பணி தற்போது மின்சார வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இது வரவேற்கும் செயலாக இருக்கிறது. இதேபோல் குளித்தலை நகர பகுதி முழுவதும் சாலையின் குறுக்கே மின்கம்பிகளை செல்லாத வகையில் சாலையின் இருபகுதியிலும் ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைத்து மின்இணைப்பு வழங்கவேண்டும் என்று சாலையோரம் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள், வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story