ஆபத்தான நிலையில் மின்கம்பம்
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆபத்தான மின்கம்பம்
திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் கீழவீதி,மேலவீதி,தெற்கு,வடக்கு வீதிகளில் மின்கம்பங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருக்கண்ணபுரம்-திருவாரூர் சாலையில் மாரியம்மன் கோவில் எதிரில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் மேல்பகுதி முறிந்த நிலையில் உள்ளது. வேகமாக காற்று வீசும் நேரங்களில் இந்த மின்கம்பம் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
அகற்ற வேண்டும்
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சவுரிராஜன் கூறுகையில், இந்த மின்கம்பம் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு வீசிய கஜா புயலின் போது சேதமடைந்தது. இதுகுறித்து பலமுறை மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்றார்.
அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து கூறுகையில், இந்த பகுதியில் மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என்றார்.