விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளர்கள் காவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
சுல்தான்பேட்டை
மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளர்கள் காவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மின் கட்டண உயர்வு
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2½ லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இந்த தறிகள் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான காடா மற்றும் பாலீஸ்டர் ரக துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் துணிகள் ஈரோடு, மும்பை, சூரத், அகமதாபாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
பின்னர் அங்கு சாயம் ஏற்றப்பட்டு லுங்கி, சட்டை, பேன்ட், திரைசீலை, போர்வை என மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக விசைத்தறியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் மின்வாரியத்தின் நஷ்டத்தை போக்கும் வகையில் தமிழக அரசு ஒரே நேரத்தில் 34 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தி உள்ளது.
மின் கட்டண உயர்வால், ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள விசைத்தறித் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
ஆனால், அரசு தரப்பில் விசைத்தறியாளர்களுக்கு சாதகமான எந்த முடிவுஎடுக்கப்படவில்லை.
இதனால் வேதனை அடைந்த கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அதன்படி, சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள 5 ஆயிரம் விசைத்தறிகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக தறிகள் தொழிலாளர்கள் இன்றியும், பணி நடைபெறாமலும் வெறிச்சோடி கிடந்தன.
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சுல்தான்பேட்டை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தற்காலிகமாக வேலை இழந்து உள்ளனர். மேலும் தினமும் ரூ.4 கோடிக்கு துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.