கார் மோதி மின்வாரிய ஊழியர் பலி
கார் மோதி மின்வாரிய ஊழியர் பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது 40). கை.களத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கமுத்துவின் மாமனார் தங்கராசு அதே ஊரில் உடல் நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை நேற்று மாலை அடக்கம் செய்துவிட்டு அங்கமுத்து மற்றும் பலர் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது வெள்ளுவாடி பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து வந்த அங்கமுத்து மீது திடீரென மோதியது. இதில் அங்கமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் நெற்குணம் நோக்கி சென்று விட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கை.களத்தூர் போலீசார் அங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.