விசைத்தறி தொழிலாளி தற்கொலை
கருப்பூர்:-
சேலம் கருப்பூரை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி வேலுமணி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்களில் மகள் பிரியதர்ஷினி, தனியார் கல்லூரியில் 3 ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகன் சஞ்சய் தேக்கம்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மூர்த்தி, வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம் தொழில் கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடனுக்கு தவணைத்தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் வங்கி மேலாளர் கடந்த 11-ந் தேதி வட்டக்காட்டில் வசித்து வரும் மூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்று கடனை செலுத்துமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அப்போது மூர்த்தியின் உறவினர் வங்கி மேலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே மனம் உடைந்து காணப்பட்ட மூர்த்தி நேற்று காலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து வட்டக்காடு பகுதியில் விஷத்தை குடித்து விட்டார். இதில் வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.