விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு


விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு
x

விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு: இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படுமா?

நாமக்கல்

குமாரபாளையம்

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி தொழிலில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கூலி உயர் ஒப்பந்தம் இதுவரை நிறைவேற்றப்படாததை கண்டித்தும், 3 ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, தற்போது 75 சதவீதம் கூலி உயர்வு வேண்டுமென கூறி விசைத்தறி தொழிலாளர்கள் கூட்டு சங்கத்தின் சார்பில் கடந்த 15 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நான்கு முறை வட்டாட்சியர் மற்றும் தொழிலாளர் நல வாரிய அலுவலர்கள் முன்பு ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறி தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவு தோல்வியிலேயே முடிவடைந்தது. இந்நிலையில் குமாரபாளையம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கஞ்சி தொட்டி திறக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இந்தநிலையில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் என அனைவரையும் தனித்தனியாக அழைத்து ஒரு சுமூக தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 24 மணி நேரம் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி கட்டமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தர்ராஜன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் குமரேஷ், குமாரபாளையம் நகர செயலாளர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story