கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு தொல்லியல் உள்விளக்க பயிற்சி


கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு தொல்லியல் உள்விளக்க பயிற்சி
x
தினத்தந்தி 6 July 2023 12:30 AM IST (Updated: 6 July 2023 12:03 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு மாணவ, மாணவிகள் 60 பேருக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்து வருகிறது. மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் பயிற்சியின் 3-ம் நாளான நேற்று அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சோழர் கால கல்வெட்டு ஒன்றை படித்து பொருள் காண்பது எப்படி என்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்று காலம் மற்றும் வரலாற்று காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் தமிழி என்று அழைக்கப்படும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் கற்று தரப்பட்டது. பின்னர் அந்த எழுத்தில் இருந்து இன்றைய கால தமிழ் எழுத்து வரை எழுத்துக்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள், கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, கோவில் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.


Next Story