5,826 ஆசிரியர்களுக்கு திறனாய்வு பயிற்சி
தர்மபுரி மாவட்டத்தில் 118 மையங்களில் 5,826 ஆசிரியர்களுக்கு திறனாய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் 118 மையங்களில் 5,826 ஆசிரியர்களுக்கு திறனாய்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
திறனாய்வு பயிற்சி
தமிழ்நாடு அரசு பள்ளிகல்வி துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 14,000 மையங்களில் நேற்று அனைத்து பாடப்பிரிவுகளுக்கான ஆசிரிய, ஆசிரியர்களுக்கு திறனாய்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படும் பாடத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், செய்முறை விளக்கங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 118 மையங்களில் ஆசிரியர்களுக்கான திறனாய்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 5,826 ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு அந்தந்த பாடப்பிரிவுகளின் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் பயிற்சி
இந்த பயிற்சி வகுப்புகளில் இதுவரை வகுப்புகளில் மாணவ- மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், இனி வரும் காலங்களில் வகுப்புகளில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வகுப்புகளை எப்படி நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் சிறந்த வல்லுனர்களை கொண்டு ஆன்லைன் மூலமும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான திறனாய்வு பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதேபோன்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களும் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டனர்.